அச்சம் விடுங்கள்; அறிவைத் தேடுங்கள் !

இராவணன் - கதையின் நாயகன்





கம்பனால் இராமாயணத்தில் அரக்கனாக, பெண் ஆசை கொண்டவனாக தமிழ் மன்னன் இராவணன் காட்டப்பட்டான்.

தமிழர்களை அரக்கர்களாக காட்டிய கம்பனுக்கு எதிராக இராவணனை கதையின் நாயகனாக காட்ட முடிவு செய்தார் புலவர் குழந்தை.

இராவண காவியம் என்ற பெயரில் தமிழ் கவிதை நூல் ஒன்றை எழுதி 1942 இல் வெளியிட்டார்.

இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராமாயணக் காவிய கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது.

இராவண காவியம் படிப்போர் இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் போற்றும் படியும், இராம, இலக்குவர்களையும் மற்றவர்களையும் வெறுக்கும் படியும் புலவர் குழந்தை திறம்பட பாடியுள்ளார்.

இக்காவியம் வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணனைத் தமிழ்க் கதாநாயகனாக சித்தரிக்கிறது.

இந்த நூல் சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் 1948 - ஆம் ஆண்டு ஜூன் 2 - ஆம் தேதி தடைசெய்யப்பட்டது. 1971ம் ஆண்டு அரசின் தடை நீக்கப்பட்டது.

இராவண காவியத்தின் கதைக்கரு புரட்சித் தன்மை உடையது. மரபு வழியாகப் போற்றிப் பேசப்பட்ட இராமனின் பெருமை இக்காப்பியத்தில் இடம் பெறவில்லை. இலங்கை மாமன்னன் வேள்வியின் பெயரால் உயிர்க்கொலை புரிவதைத் தடுத்து நிறுத்தி நல்வழிப்படுத்த முனைகிறான். அதன் காரணமாக இராவணனுக்கும் இராமனுக்கும் போர் நடக்கிறது. உயிர்க்கொலை மறுப்பு இக்காப்பியத்தின் கருப்பொருள் ஆகும்.

சூர்ப்பனகை - ( காமவல்லி ) அழகான பெண் அவளுடைய அழகை கண்டு இராமன் காமம் கொண்டு அவளது கையை பிடித்து இழுக்கிறான்,இலக்குவன் அவளுடைய அங்கங்களை அறுத்து அவளைக் கொன்று விடுகிறான்.அதனாலேயே சீதையை இராவணன் கொண்டு செல்கிறான்.

எஸ்.நிகிந்தன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.