அச்சம் விடுங்கள்; அறிவைத் தேடுங்கள் !

21 May 2011

பகுத்தறிவுக்கண் கொண்டு பார் !



கம்ப ராமாயணம் பெரிய புராணம், மனுநீதி முதலிய புத்தகங்களைச் சுயமரியாதைக்காரர்கள் தீ வைக்கப் போவதை குறித்து, இந்து பத்திரிகை 17.01.43-ல் ஓர் உபதலையங்கத்தில் ஓர் ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறது.
இவ்விதம் சுயமரியாதைக்காரர்கள் செய்கையைக் கண்டிக்க இந்துப் பத்திரிகைக்கு யோக்கியதையுண்டா?

காங்கிரஸ்காரர்கள் பரதேசித் துணியை மூட்டை மூட்டையாய்க் கழுதைபோல் சுமந்து போய்த் தீ வைத்துக் கொளுத்தினபோது, இந்து பேப்பரின் புத்தி புல் மேயப் போயிருந்ததோ?
துணிகளை மட்டும கொளுத்தலாமா?
அது அறிவுடையவர்கள் செய்கைதானா?
தனக்கு வேண்டாதவைகளைக் கொளுத்தினால் அது குற்றமாகாதென்பது இந்துவுன் கருத்தா?
உனக்கு வேண்டாதவைகளைக் கொளுத்த உனக்குச் சுதந்திரமிருக்கும்போது, எனக்கு வேண்டாதவைகளை நான் கொளுத்தினால் நீ என்ன கேட்பது, பாலம் கட்னால் இருகரைக்கும்தானே? உனக்கொரு வழக்கு மற்றவர்களுக்கு ஓர் வழக்கா?
இதற்குச் சர்க்கார் உதவி தேடுவது வேறா?
நிற்க! சுயமரியாதைக்காரர்கள் கம்பராமாயணத்தையும், பெரியபுராணத்தையும், தமிழ் அபிமானம் கருதித் தீக்கிரையாக்குவதினின்றும் விலக்கிவிட்டு மனுஸ்மிருதியை மட்டுமூ எரியவிடுவார்களா; அதை தீக்கிரையாக்க வேண்டியது அவசியத்திலும் அவசியம். அதற்காக ஜெயிலுக்குப் போகவேண்டியது நேரிட்டால் ஜெயிலுக்குப் போகும் போதும பின் விடுதலையாய் வந்த உடனும் இந்தப் புண்ணிய கைங்கரியத்தைத் தமிழ் இரத்தம் ஓடும ஒவ்வொருவனும் செய்யவேண்டியதே.
நாய், கழுதை, பன்றி முதலியவைகளுடன் நம்மை ஒப்பிட்டுப் பேசும் புத்தகத்தை எது செய்தால் என்ன?
தமிழர்களேசுயமரியாதை எந்தக் காரியமானாலும அதன் விஷய உண்மைகளை ஆராய்ந்து அலசிப்பார்த்து காங்கிரஸ் பத்திரிகைக் கூற்றுகளில் மயங்கி உங்கள் சித்தத்தைச் சிதறவிடாதீர்கள்.
அ.வ.முத்தையா பிள்ளை, தலைவர் எஸ்.ஐ.எல்.எப். திருநெல்வேலி ஜில்லா.

குறிப்பு:- இவ்வறிக்கை, மனுதர்ம நூலைக் கொளுத்துவதை வண்மையாய் ஆதரித்தும், பெரிய புராணம், கம்ப ராமாயணமாகிய இரண்டினையும் தமிழ்ப் பற்றின் காரணமாகக் கொளத்த வேண்டாமென்றம் வற்புறுத்துகிறது.

மனுஸ்மிருதியில் தமிழ் மக்களை நாய், கழுதை, பன்றி முதலியவைகளுக்கு ஒப்பிட்டுப் பேசியிருப்பதால் அதனை கொளுத்த வேண்டும்.

கம்இராமாயணத்தில், தமிழ மக்களைக் குரங்குகள் என்று தமிழ் மன்னனான இராவணனை அரக்கனென்றும் அயோத்தி அரசனான இராமனைக் கடவுள் என்றும் பேசப்பட்டிருக்கிறதே! இதைக் கொளுத்துவதில் என்ன தவறு?

பெரியபுராணத்தில், தமிழ் மக்களைச் சற்சூத்திரர் அதாவது நல்ல அடிமைகள் என்றம், ஒழுக்கங் கெட்டவர்கள் என்றும், கொலைக்கஞ்சாக் கொடியவர்கள் என்றும், முட்டாள்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறதே! இதைக் கொளுத்துவதில் என்ன தவறு?

 மொழிப்பற்று ஒன்றை மட்டும் கருதினால் போதுமா?
 தமிழ் மக்களை முட்டாளாக்கியும் மிருகத்தன்மை கற்பித்தும் உள்ள இத்தகைய நூல்களைக் கொளுத்தாது விடுவது உண்மையான மொழிப்பற்றாகுமா?

ஒரு மொழியினிடத்துப் பற்றுவைப்பது வேறு; அந்த மொழி கற்பிக்கும் அறிவுக் கொவ்வாக் கருததுக்களை ஆதரிப்பது வேறு, தாயைப் போற்றுவதும் தாயை விலைமகளாக்குவதும் ஒன்றுதானா?

இயற்கை அமைப்பும், இனிமையும், சொற்சுவை பொருட்சுவையும் வாய்ந்துள்ள நமது அருமைத் தமிழ்மொழியின் கண், மணியிடையே பவளம் போல் வந்து கலந்துள்ள ஆரிய மொழியையும் அது கற்பிக்கும் அறிவிக்கும் இயற்கைக்கும் பொருந்தாக் கதைகளையும் நுழைத்துத்தானோ தமிழ்ப்பற்றை உணர்த்துவது?

தம் மனைவியை இன்னொருவனுக்கு விட்டுக கொடுத்தால்தான், அந்த சிவனாரின் திருவருள் கிடைக்கும் என்று கூறும் ஒரு புராணத்தை இன்னும் கொளுத்தாமல் இருப்பது தமிழ் மக்களின் தவறென்பதே பகுத்தறிவாளரின் கருத்தாகும்.


சென்னை நக்கீரர் கழக எழுத்தாளர் ஒருவர், மனு தர்ம நூல் இறந்துவிட்டதென்றும், ஆங்கிலேயர்களே மனு தர்ம நூலைத் தள்ளிவிட்டார்கள் என்றும்; கம்பராமாயணத்தை மதக்கண் கொண்டு பார்க்காமல் அறிவுக்கண் கொண்டு பார்க்க முடியும், பெரியபுராணத்தைச் சரித்திரக்கண் கொண்டு பார்க்கும் படியும் எழுதுகிறார்.

சமூக சம்பந்தமான வழக்குகள் முறை மன்றங்களில் நடக்கும்போதெல்லாம் நீதி வழங்குவோர், மனுதர்ம நூலையும் பராசஸ்மிருதி நூலையுமே மேற்கோள் காட்டி வழக்குகளை முடிவு செய்து வருவதை இந்நண்பர் அறியாதிருப்பது பெரிதும் வருந்தத்தக்கதே.

மைசூர் திருவாங்கூர் முதலான ஊர்களில் இருக்கும் குறுநில மன்னரைப்போன்ற ஒரு அயோத்தி அரசனைக் கடவுளாக்குவதற்காகப் பாடப்பெற்ற கம்பராமாயணத்தை மதக்கண் கொண்டு பார்க்காமல் அறிவுக்கண் கொண்டு பார்த்தாலும் இராமனைக் கடவுளாக வணங்கு என்ற மத முடிவைத்தான் அது கற்பிக்கிறது. எனவே மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் துணை செய்யாத இதில் அறிவுக் கண்ணுக்கு வேலை எங்குளது?

இனிப் பெரியபுராணத்தைத் சரித்திரக் கண்கொண்டு பார்க்கும்படி எழுதும் இந்நண்பர்க்குச் சரித்திரமே தெரியாதென்று நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஒன்று மட்டுமூ உண்மை. அதாவது, ஒரு காலத்திலே தமிழ்நாட்டில் 63 முட்டாள்கள் இருந்தார்கள்.
அவர்களின் சரித்திரத்தைக் கூறுவதுதான் பெரியபுராணம் என்று சொன்னால் அதை நாம் வரவேற்கிறோம். மற்றும் பெரியபுராணத்தில், மக்களின் அறிவைப் பாழாக்கும் முட்டாள்தனமான கதைகளைத் தவிர, வேறு சரித்திர சம்பந்தமான உண்மை நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என்பதைப் பகுத்தறிவுக்கண் கொண்டு பார்க்கும்படி, நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்ற கூறிய நக்கீரன் பெயரால் கழகம் நிறுவி, அதன் எழுத்தாளனாக இருக்கும் நண்பரைக் கேட்டுக்கொள்கிறோம்.

அறிஞர் அண்ணா (திராவிடநாடு - 31.01.1943)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.