அச்சம் விடுங்கள்; அறிவைத் தேடுங்கள் !

3 Jun 2011

சிந்திப்பதில் சிறந்தவன் மனிதன்







சிந்திப்பதில் சிறந்தவன் மனிதன்



நாத்திகர்கள் எண்ணிக்கையில் இன்று அதிகரித்துக் கொண்டிருப்பதால் மத வியாபாரிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அதன் எதிரொலியாக, ஓ நாத்திகர்களே நீங்கள் நினைப்பது போன்று இறந்த பிறகு ஒரு வாழ்க்கை இல்லை என்றால், அது உண்மையாகவே இருந்தாலும் கடவுளை நம்பி வழிபட்டதால் எங்களைப் போன்றவர்களுக்கு அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

ஆனால், கடவுளை வணங்காமல் மறுத்துக் கொண்டும், இழிவாகப் பேசிக்கொண்டும் - கவலையின்றி காலம் முழுவதும் வீணாக வாழ்வைக் கழித்துவிட்டு, இறப்புக்குப் பின் நாங்கள் நம்புவது போல் மறுவாழ்வு இருந்து, உங்கள் முன் கடவுள் தோன்றி கேள்விகள் கேட்டால் உங்களது நிலைமை என்னவாகும்? என்று மத நிறுவனத்தார்கள் நம்மைப்பற்றிக் கவலை கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். பாவம்...

ஆக எப்படியாவது பயமுறுத்தித்தான் கடவுளை நம்பவைக்க முடியும் என்கிற அடிப்படைத் தத்துவத்தைக் கொண்டுதான் ஆண்டாண்டுக் காலமாய் ஏமாற்றி வருகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளலாம். ஆனால், நாத்திகர்களின் நிலைமை அப்படி அல்ல. இல்லாத ஒன்றை இல்லை என்கிறோம்.

இருப்பது தெரியவந்தால் ஏற்றுக் கொள்வோம். இக்கொள்கையில் ஈடுபாடு உள்ளவர்கள் இணைகிறார்கள். இன்னும் சிலர் வெளியில் இருந்தே ஆதரவுக் குரல் கொடுக்கிறார்கள். இணைந்தவர்கள் பிரியும் போது யாரும் யாரையும் மிரட்டவோ, கண்டனக் குரலோ கொடுப்பதும் இல்லை.

இல்லாத கடவுளை நிரூபிக்க முடியாதவர்கள் வேடிக்கையாக ஒன்றைக் கூறுவார்கள். எதையும் கண்ணால் பார்த்து விட்டுத்தான் நம்புவேன் என்றால் அதற்கு ஆறாம் அறிவு தேவையில்லை. அய்ம்புலன்களை மட்டுமே கடவுள் நமக்குத் தந்திருந்தால்தான் அது சாத்தியமாகும். ஆனால், அதையும் தாண்டி சிந்திக்கும் திறனை கடவுள் நமக்குத் தந்திருக்கும்போது இது சாத்தியமில்லை, என்பதாக புத்திசாலித்தனமாக வாதிடுவதை நாம் பார்க்கலாம்.

பிறக்கும்போதே நமக்குச் சிந்திக்கின்ற திறன் கடவுளால்தான் வழங்கப்பட்டது எனில், ஒவ்வொருவரும் பிறப்பு முதல் இறப்புவரை ஒரே கடவுளைத்தான் வணங்கியிருக்க வேண்டும். இதிலிருந்தே சிந்திக்கும் திறன் கடவுளால் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

மேலும், அய்ந்தறிவு பெற்றவைகள் யாவும் ஒரே சீராக கடவுளைப்பற்றிய சிந்தனையே இல்லாமலிருப்பது போல, ஆறாம் அறிவு பெற்ற மனிதர்கள் மட்டும் ஒரே சீராக கடவுளையோ, வணக்க வழிபாட்டையோ ஏற்காமல் போனது ஏனோ? எனவே, பல்வேறுபட்ட கடவுள்களை வணங்குவதும், மறுப்பதும், இடைப்பட்ட நாம் இவர்தான் தாய், தந்தை, கடவுள் என உணர்த்தும்போதும், அதையே அவர்களும் கடைப்பிடிக்கும் போதும் நாம் மாறுபடுத்தப்பட்டோம் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

சிந்திக்கும் திறன் அய்ந்தறிவு பெற்றவை களுக்கும் உண்டு என்பதை மறைமுகமாக மறைக்கப் பார்ப்பதும் மத வியாபாரிகளின் ஒருவகைத் தந்திரமேயன்றி வேறில்லை. இரை தேடுதல், குஞ்சுகளுக்கு உணவளித்தல், தன்னையும் தன் குட்டிகளையும் பாதுகாத்தல் போன்ற செயல்களும் சிந்தனைக்குரியதுதான். ஒரு சிறு குருவி தனக்காகக் கூடு கட்டுகிறதென்றால் அது சிந்திக்காமலா கட்டுகின்றது? அதுபோல் அடுக்குமாடிக் கட்டிடங்களில் இருக்கும் பூனைக்குட்டி, (பழக்கமில்லாத இடமாக இருந்தால்) கீழிறங்க அது கையாளும் யுக்திகளை நாம் நேரிலேயே பார்க்கலாம்.

அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து உற்றுநோக்கிய பின், தண்ணீர்க் குழாய், அல்லது ஜன்னல்கள் வழியாக என அதற்கு ஏதுவான ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டு தான் கீழே இறங்குமே தவிர, மொட்டை மாடியிலிருந்து செங்குத்தாக எந்தப் பூனையும் குதித்துவிடாது. இவ்வளவும் சிந்தித்துச் செயல்படாமலா நடைபெறுகின்றது?

காட்டுமிராண்டி காலத்துக் கடவுள் வகைகளை வணங்குதலையே சிந்தித்துத்தான் நடைபெறுகிறது எனும்போது, அதனை மறுத்துக் கூறுவது சிந்தனைக்குரியது இல்லையோ! ஒருசேர இவ்விரண்டு சிந்தனைகளையும் மனிதர்களுக்குக் கொடுத்த வன் நிச்சயமாக கடவுளாக இருக்க முடியாது. ஆகவே, சிந்தனை என்பது அறிவின் வளர்ச்சியைப் பொறுத்து மாறுபடுகிறது.

இது தான் கடவுள், இதைத்தான் வணங்க வேண்டும், இதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தால்தான் சிந்தனை முடக்கப்படுகிறது. ஏன் வணங்கவேண்டும், கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்கும்போதுதான் சிந்தனை மாறுபடுகிறது. இவற்றைப் பகுத்து அறிந்தவனே பகுத்தறிவுவாதி. கண்மூடி ஏற்பவன் மூடநம்பிக்கைவாதி.

ஆதலால், கண்மூடி வணங்குவதைவிட ஒரு கணம் சிந்தியுங்கள் தோழர்களே!! சிந்திப்பதில் சிறந்த இனம் மனத இனமே!!!

இனியவன், துபாய் (உண்மை )

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.