அச்சம் விடுங்கள்; அறிவைத் தேடுங்கள் !

21 May 2011

பகுத்தறிவுக்கண் கொண்டு பார் !



கம்ப ராமாயணம் பெரிய புராணம், மனுநீதி முதலிய புத்தகங்களைச் சுயமரியாதைக்காரர்கள் தீ வைக்கப் போவதை குறித்து, இந்து பத்திரிகை 17.01.43-ல் ஓர் உபதலையங்கத்தில் ஓர் ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறது.
இவ்விதம் சுயமரியாதைக்காரர்கள் செய்கையைக் கண்டிக்க இந்துப் பத்திரிகைக்கு யோக்கியதையுண்டா?

காங்கிரஸ்காரர்கள் பரதேசித் துணியை மூட்டை மூட்டையாய்க் கழுதைபோல் சுமந்து போய்த் தீ வைத்துக் கொளுத்தினபோது, இந்து பேப்பரின் புத்தி புல் மேயப் போயிருந்ததோ?
துணிகளை மட்டும கொளுத்தலாமா?
அது அறிவுடையவர்கள் செய்கைதானா?
தனக்கு வேண்டாதவைகளைக் கொளுத்தினால் அது குற்றமாகாதென்பது இந்துவுன் கருத்தா?
உனக்கு வேண்டாதவைகளைக் கொளுத்த உனக்குச் சுதந்திரமிருக்கும்போது, எனக்கு வேண்டாதவைகளை நான் கொளுத்தினால் நீ என்ன கேட்பது, பாலம் கட்னால் இருகரைக்கும்தானே? உனக்கொரு வழக்கு மற்றவர்களுக்கு ஓர் வழக்கா?
இதற்குச் சர்க்கார் உதவி தேடுவது வேறா?
நிற்க! சுயமரியாதைக்காரர்கள் கம்பராமாயணத்தையும், பெரியபுராணத்தையும், தமிழ் அபிமானம் கருதித் தீக்கிரையாக்குவதினின்றும் விலக்கிவிட்டு மனுஸ்மிருதியை மட்டுமூ எரியவிடுவார்களா; அதை தீக்கிரையாக்க வேண்டியது அவசியத்திலும் அவசியம். அதற்காக ஜெயிலுக்குப் போகவேண்டியது நேரிட்டால் ஜெயிலுக்குப் போகும் போதும பின் விடுதலையாய் வந்த உடனும் இந்தப் புண்ணிய கைங்கரியத்தைத் தமிழ் இரத்தம் ஓடும ஒவ்வொருவனும் செய்யவேண்டியதே.
நாய், கழுதை, பன்றி முதலியவைகளுடன் நம்மை ஒப்பிட்டுப் பேசும் புத்தகத்தை எது செய்தால் என்ன?
தமிழர்களேசுயமரியாதை எந்தக் காரியமானாலும அதன் விஷய உண்மைகளை ஆராய்ந்து அலசிப்பார்த்து காங்கிரஸ் பத்திரிகைக் கூற்றுகளில் மயங்கி உங்கள் சித்தத்தைச் சிதறவிடாதீர்கள்.
அ.வ.முத்தையா பிள்ளை, தலைவர் எஸ்.ஐ.எல்.எப். திருநெல்வேலி ஜில்லா.

குறிப்பு:- இவ்வறிக்கை, மனுதர்ம நூலைக் கொளுத்துவதை வண்மையாய் ஆதரித்தும், பெரிய புராணம், கம்ப ராமாயணமாகிய இரண்டினையும் தமிழ்ப் பற்றின் காரணமாகக் கொளத்த வேண்டாமென்றம் வற்புறுத்துகிறது.

மனுஸ்மிருதியில் தமிழ் மக்களை நாய், கழுதை, பன்றி முதலியவைகளுக்கு ஒப்பிட்டுப் பேசியிருப்பதால் அதனை கொளுத்த வேண்டும்.

கம்இராமாயணத்தில், தமிழ மக்களைக் குரங்குகள் என்று தமிழ் மன்னனான இராவணனை அரக்கனென்றும் அயோத்தி அரசனான இராமனைக் கடவுள் என்றும் பேசப்பட்டிருக்கிறதே! இதைக் கொளுத்துவதில் என்ன தவறு?

பெரியபுராணத்தில், தமிழ் மக்களைச் சற்சூத்திரர் அதாவது நல்ல அடிமைகள் என்றம், ஒழுக்கங் கெட்டவர்கள் என்றும், கொலைக்கஞ்சாக் கொடியவர்கள் என்றும், முட்டாள்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறதே! இதைக் கொளுத்துவதில் என்ன தவறு?

 மொழிப்பற்று ஒன்றை மட்டும் கருதினால் போதுமா?
 தமிழ் மக்களை முட்டாளாக்கியும் மிருகத்தன்மை கற்பித்தும் உள்ள இத்தகைய நூல்களைக் கொளுத்தாது விடுவது உண்மையான மொழிப்பற்றாகுமா?

ஒரு மொழியினிடத்துப் பற்றுவைப்பது வேறு; அந்த மொழி கற்பிக்கும் அறிவுக் கொவ்வாக் கருததுக்களை ஆதரிப்பது வேறு, தாயைப் போற்றுவதும் தாயை விலைமகளாக்குவதும் ஒன்றுதானா?

இயற்கை அமைப்பும், இனிமையும், சொற்சுவை பொருட்சுவையும் வாய்ந்துள்ள நமது அருமைத் தமிழ்மொழியின் கண், மணியிடையே பவளம் போல் வந்து கலந்துள்ள ஆரிய மொழியையும் அது கற்பிக்கும் அறிவிக்கும் இயற்கைக்கும் பொருந்தாக் கதைகளையும் நுழைத்துத்தானோ தமிழ்ப்பற்றை உணர்த்துவது?

தம் மனைவியை இன்னொருவனுக்கு விட்டுக கொடுத்தால்தான், அந்த சிவனாரின் திருவருள் கிடைக்கும் என்று கூறும் ஒரு புராணத்தை இன்னும் கொளுத்தாமல் இருப்பது தமிழ் மக்களின் தவறென்பதே பகுத்தறிவாளரின் கருத்தாகும்.


சென்னை நக்கீரர் கழக எழுத்தாளர் ஒருவர், மனு தர்ம நூல் இறந்துவிட்டதென்றும், ஆங்கிலேயர்களே மனு தர்ம நூலைத் தள்ளிவிட்டார்கள் என்றும்; கம்பராமாயணத்தை மதக்கண் கொண்டு பார்க்காமல் அறிவுக்கண் கொண்டு பார்க்க முடியும், பெரியபுராணத்தைச் சரித்திரக்கண் கொண்டு பார்க்கும் படியும் எழுதுகிறார்.

சமூக சம்பந்தமான வழக்குகள் முறை மன்றங்களில் நடக்கும்போதெல்லாம் நீதி வழங்குவோர், மனுதர்ம நூலையும் பராசஸ்மிருதி நூலையுமே மேற்கோள் காட்டி வழக்குகளை முடிவு செய்து வருவதை இந்நண்பர் அறியாதிருப்பது பெரிதும் வருந்தத்தக்கதே.

மைசூர் திருவாங்கூர் முதலான ஊர்களில் இருக்கும் குறுநில மன்னரைப்போன்ற ஒரு அயோத்தி அரசனைக் கடவுளாக்குவதற்காகப் பாடப்பெற்ற கம்பராமாயணத்தை மதக்கண் கொண்டு பார்க்காமல் அறிவுக்கண் கொண்டு பார்த்தாலும் இராமனைக் கடவுளாக வணங்கு என்ற மத முடிவைத்தான் அது கற்பிக்கிறது. எனவே மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் துணை செய்யாத இதில் அறிவுக் கண்ணுக்கு வேலை எங்குளது?

இனிப் பெரியபுராணத்தைத் சரித்திரக் கண்கொண்டு பார்க்கும்படி எழுதும் இந்நண்பர்க்குச் சரித்திரமே தெரியாதென்று நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஒன்று மட்டுமூ உண்மை. அதாவது, ஒரு காலத்திலே தமிழ்நாட்டில் 63 முட்டாள்கள் இருந்தார்கள்.
அவர்களின் சரித்திரத்தைக் கூறுவதுதான் பெரியபுராணம் என்று சொன்னால் அதை நாம் வரவேற்கிறோம். மற்றும் பெரியபுராணத்தில், மக்களின் அறிவைப் பாழாக்கும் முட்டாள்தனமான கதைகளைத் தவிர, வேறு சரித்திர சம்பந்தமான உண்மை நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என்பதைப் பகுத்தறிவுக்கண் கொண்டு பார்க்கும்படி, நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்ற கூறிய நக்கீரன் பெயரால் கழகம் நிறுவி, அதன் எழுத்தாளனாக இருக்கும் நண்பரைக் கேட்டுக்கொள்கிறோம்.

அறிஞர் அண்ணா (திராவிடநாடு - 31.01.1943)

10 May 2011

கோயில்கள் ? - ஓர் ஆராய்ச்சி




உலகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில்தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில்தான் அதிக மான பெரிய ஆலயங்கள் (கோவில்கள்) இருக்கின்றன.

இந்தப்படி அதிகமான பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டிருப்பவையெல்லாம் பெரிதும் அக்கால அரசாங்க அரசர்களாலேயே கட்டப்பட்டவையாகும்.
இதற்குக் காரணம் என்னவென்றால், அக்காலத் தில் இந்த ஆலயங்களின் மூலம் அரசாங்கத்திற்கு பணம் (நிதி) வருவாய்க்கு வழி செய்துகொள்ளும் ஏற்பாடு இருந்திருக்கிறது என்பதுதான்.
எது போலென்றால் சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன் வரையில், அரசாங்க நிதி (வரி) வசூலுக்கு அரசாங்கமே மது (கள்ளு)க்கடைகளை ஏற்பாடு செய்து அதை வியாபாரம் போல் செய்து பணம் சம்பாதித்து, வரி நிதியோடு சேர்த்து வந்ததுபோலவேயாகும். அதனா லேயே கோவில் கட்டுவது என்பதை அரசாங்கத்திற்கே உரிமையாக வைத்துக் கொள்ளப்பட்டிருந்ததுடன் அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் கோவில் கட்டக் கூடாது என்கிற நிபந்தனையும் இருந்து வந்திருக்கிறது. இதற்கு ஆதாரம் நம் தேசத்தில் சுதேச சமஸ்தானங்கள் இருக்கும்வரை அந்த அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் எந்த கோவிலையும் கட்டக் கூடாது என்ற நிபந்தனை இருந்து வந்திருப்பதேயாகும்.
சுமார் 2000 ஆண்டுகளுக்குமுன் சாணக்கியர் என்ற ஒரு பார்ப்பனர் பொருளாதார நிபுணராக இருந்தார்; அவர் உண்டாக்கிய அர்த்தசாஸ்திரம் என்னும் நீதி நூலில் இதைப்பற்றி விளக்கியுள்ளார். இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நூலா னது மனுதர்ம சாஸ்திரம், யாக்ஞவல்கியர் ஸ்மிருதி ஆகிய நூல்களுக்கும் முந்தியதாகும் என்பது ஆராய்ச் சியாளரின் முடிவு. இதிலிருந்து மனு யாக்ஞவல்கியர் முதலிய நீதி நூல்களின் ஆயுள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு உட்பட்டதென்றே தெரிகிறது.
இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் மத சம்பந்தமான ஸ்தாபனங்களை மேற்பார்வை செய்யும் அரசாங்க அதிகாரி நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துகளின் வரும்படிகளையும், கோவில்களுக்கு பக்தர்களிடமி ருந்து பணமாக வசூலித்து, அந்தப்படி வசூலிக்கப்படும் பணத்தையும் அரசாங்க வருவாய் நிதியுடன் சேர்க்கவேண்டும் என்ற விதிகள் இருந்திருக்கின்றன.

                                                                         புதிய வருவாய்த் திட்டம்

அரசாங்கத்திற்குப் புதிய வருவாய்த் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வசூலிக்க பல திட்டங்கள் இருந்தன.
ஒரு இரவில் பொதுமக்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு கடவுளை அல்லது மேடையை ஏற்படுத்தி, அதைத் தானாகத் தோன்றியது என்று விளம்பரப்படுத்தி, அதை வணங்கினால் பல கெடுதிகள், வியாதிகள் விலகு மென்று கூறி திருவிழாக்கள் முதலியன நடத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்து பொக்கிஷத்தில் சேர்க்க வேண்டியது.
அரசாங்க ஒற்றர்களை விட்டு ஒரு மரத்தில் பிசாசு, முனி இருப்பதாக பொதுமக்களிடம் பயத்தை ஏற்படுத்திவிட வேண்டும். பிறகு இதை விரட்டவும், திருப்தி செய்யவும் பெரிய சாந்தி விழா நடத்தி பெருந்தொகை வசூலித்து பொக்கிஷத்திற்கு சேர்த்துவிடவேண்டும்.
அரசரது ஒற்றர்கள் சந்நியாசி மாதிரி வேடம் பூண்டு இந்த தந்திரத்தைச் செய்து பணத்தை வசூலிக்க வேண்டியது. இவற்றால் பிசாசு நகரத்தை விட்டுப் போய்விடுகிறது. பணம் அரசரது பொக்கிஷத்திற்கு சேர்கிறது. அந்தக் காலத்தில் அரசனுக்குப் பணம் தேடிக் கொடுக்கும் வேலை அதிகாரிகளுக்கும் கடுமையான வேலையாகவே இருந்திருக்கவேண்டும்.
மற்றும் பாம்பைக் காட்டி பணம் பறிக்கும் தந்திரம் இதைவிட விசித்திரமானது; இது இன்றுங்கூட சிறிது மாற்றத்துடன் - ஒரு கோவிலிலாவது - இருந்து வருவ தாகத் தெரிகிறது. சாணக்கியர் காலத்தில் தீர்த்தம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்குமென்பதை எளிதாக உணர்ந்துகொள்ளலாம். சாதாரணமாக எளிதில் இவ்விஷயங்களை நம்பாத மக்களிடத்தில்தான் இந்த தீர்த்தம் உபயோகிக்கப்பட்டது. இதை அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மருந்தாக உபயோகித்தார்கள். ஆனால், இந்தத் தந்திரங்களையெல்லாம் அரசர் களுடைய காரியத்திற்காக உபயோகித்தார்களேயன்றி இன்று நடப்பதுபோல் ஒரு சிலருடைய சுயநல வாழ்வுக் காகவன்று என்பதை ஞாபகத்திலிருத்திக் கொள்ள வேண்டும். தந்திரம் இரண்டும் ஒன்றுதான்.
பார்ப்பான் தன்னலத்தையும், ஆதாயத்தையும் கருதி கோவில்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந் திரத்தையும் உபயோகிப்பான் என்று பிரஞ்சு பாதிரி யாரான கற்றறிந்த ஆபே டூபே ஒரு நூற்றாண்டுக்குமுன் எழுதியிருக்கிறார். மேலும் சாணக்கியர் கூறுவதாவது:

                                                                           அற்புதங்கள் உற்பத்தி

அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் பால் வடித்தாலாவது அல்லது அகாலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்திருந்தாலாவது அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது ஜனங்களிடம் காட்டி பிரசித்திப்படுத்தவேண்டும்.
அல்லது ஒரு கிணற்றில் அனேக தலைகளை யுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடமிருந்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.
ஒரு பாம்பு விக்கிரகத்தில் துவாரமிட்டோ அல்லது கோவிலின் இருட்டு மூலையிலோ அல்லது ஏதாவது பொந்திலோ பசியால் வாடிக் கிடக்கும் பாம்பு ஒன்றை வைத்து, ஜனங்களைப் பார்க்கச் சொல்லி பணம் வசூலிக்கலாம். இம்மாதிரி தந்திரங்களை எளிதில் நம்பாத ஜனங்களுக்கு மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்த மென்றும், பிரசாதமென்றும் சொல்லிக் குடிக்கும்படிச் செய்து, அவர்கள் குடித்து மயங்கியவுடன் அதற்குக் கடவுள் கோபம் என்றும் சொல்லவேண்டியது. அல்லது தாழ்ந்த ஜாதியானொருவனைப் பாம்பு கடிக்கும்படி செய்து இம்மாதிரி துர்சகுனம் நேரிடாது தடுக்கப் போவதாகப் பாசாங்கு செய்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.
தெய்வங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகள் அரசனது பொக்கிஷத்தைச் சேரவேண்டும்! அரசனது செலவுக்காக அரசன் வாழும் பொருட்டுப் பணம் வசூலிக்க ஒரே இரவில் தேவதைகளையும், பீடங்களையும் ஸ்தா பித்துத் திருவிழாக்கள் நடத்தவேண்டும்! காணிக்கை களைப் பெறுவதற்காக அடிக்கடி கடவுள்கள் தோன்றும் படிச் செய்யவேண்டும்! சாதாரணமாக மிக வெளிப் படையான தந்திரங்கள்தான் அதிகமான பலனை அளிக் கின்றது. கடவுள் தம் மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்து பணம் திரட்டும் வழி முன் காலத்தில்தான் மற்ற நாட்டுப் புரோகிதர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆனால், இந்தியாவில் இன்றும் இவ்வழக்கம் ஓயவில்லை. இங்கு விக்கிரகங்களே பேசுகின்றன. இவற்றை வழிபடுகிறவர்கள் மிகக் கவனமாகக் கேட்டு பரவசமடைகிறார்கள். ஆனால், கல் விக்கிரகத்தின் உள்ளோ, பக்கத்திலோ வஞ்சகனொ ருவன் மறைந்திருந்து விக்கிரகத்தின் வாய்வழியாகப் பேசுகின்றான் என்பதை இவர்கள் அறிவதில்லையென்று ஆபே டூபே கூறுகின்றார். இவைபோன்று இன்றளவும் கையாளப்பட்டு வருகிற பலவிதத் தந்திரங்களையும் அவர் விரிவாக விளக்குகிறார்.

                                                                     கோவில்மூலம் வியாபாரம்

இனி நமது சாணக்கியரைக் கவனிப்போம். சாணக் கியர் காலத்தில் கோவில் வருவாயிலிருந்து ஒரு பைசா வாவது அரசனது பொக்கிஷத்தைச் சேரத் தவறி விட்டால், அந்த இடத்திலேயே கோவில் அதிகாரி ஏன் தூக்கி லிடப்பட்டிருப்பார் என்பதை நாம் மேற்சொன்னவற்றி லிருந்து அறிந்துகொள்ளலாம்.
அது மிகவும் நியாயமே, ஏனெனில், அக்காலத்தில் விக்கிரகங்களும், பீடங்களும், அரசனது வியாபாரத்திற் காக ஏற்பட்டவைகளாகும். பொது ஜனங்களின் பணத் தைச் செலவிட்டே விக்கிரகங்களையும், பீடங்களையும், மடங்களையும், கோவில்களையும் உண்டுபண்ணி பரி பாலித்து அவற்றைப்பற்றி பெரிதாக விளம்பரப்படுத் தியும் வந்தார்கள். இக்காலத்தில் அரசாங்கத்தார் எவ்வாறு பெரும் பொருள் செலவிட்டு மேட்டூர் தேக்கத்தையும், சுக்கூர் அணைக்கட்டையும் கட்டி, அவற்றினின்றும் லாபத்தை எதிர்பார்க்கின்றார்களோ, அதேபோல முன் காலத்து அரசர்கள் கோவில்களையும், ஸ்தலங்களையும் உற்பத்தி செய்ததும் லாபத்தைக் கருதியேயாகும்.
இம்மாதிரி மத ஸ்தாபனங்களை ஏற்படுத்திய முற்கால மன்னர்களைச் சுற்றி விரோதிகள் எப்பொழுதும் இருந்து வந்ததால் இடைவிடாது யுத்தங்கள் நேரிட்டுக் கொண் டேயிருந்தன; இதற்காக அவர்கள் பெருஞ்சேனைகளை வைத்திருந்தனர். யுத்தங்களுக்கும், சேனைகளுக்கும் வேண்டிய பணத்திற்காக ஏராளமான வருவாய் தேவைப் பட்டது. கோவில் வருவாயைக் கொண்டு பார்ப்பனருக்கு மட்டும் சோறு போடுவது என்றிருந்தால், அரசும் கோவிலும் அன்றே மறைந்திருக்கும். இக்கோவில்களையும், பீடங்களையும், கடவுள்களையும் படைத்த அக்காலத்து அரசர்களுக்கு அரசாங்கத்தை நடத்தும் கஷ்டம் எவ்வளவு என்று தெரியும். உதாரணமாக பூரண மதுவிலக்கு ஏற்பட்டால், நாட்டில் உயர்தரக் கல்வியை நிறுத்த நேரிடு மென்று இன்று (இராஜாஜி முதலியவர்கள்) சொல்வது போல, தங்களது க்ஷேமமும் கோவில் வருமானத்தில் தொங்கிக் கிடந்தனவென்பதை அக்கால அரசர்கள் அறிந்திருந்தார்கள். ஆதலால் அவர்கள் அதன் மீது மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்கள். இவ்வுலக சுக துக்கங்களைக் குறித்து அவர்கள் நினைத்தார் களேயன்றி மோட்சலோகத்தைப்பற்றி நினைக்கவில்லை. இக்காலத்து சுதேச மன்னர்களில் பெரும்பாலோர் யாதொரு பொறுப்பும், கவலையுமெடுக்காது மோட்ச லோகத்தைப்பற்றி நினைக்கின்றார்கள். பார்ப்பானை திருப்தி செய்தால் மோட்சத்துக்கு சீட்டு கிடைத்து விடுமென நம்புகிறார்கள். அங்ஙனம் செய்துவிட்டு, தங்கள் ராஜ்ஜியங்களை விட்டு தற்கால மோட்ச பூமியான பாரிஸ் முதலிய மேநாடுகளுக்குச் சென்று விடுவதுமுண்டு.

                                                                                  மன்னர்கள் யோக்கியதை

சர்தார் கே.எம். பணிக்கர் அவர்கள் இந்திய சமஸ்தானங்களும், இந்திய அரசாங்கமும் என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.
பல சிற்றரசரகள் மித மிஞ்சிய சுக போகங்களுடன் இழிவான வாழ்க்கை வாழ்வதற்குக் காரணம் அவர்கள் இராஜ்ஜிய பாரத்தில் நேராக பொறுப்பேற்று நடத்தாததேயாகும். முன்காலங்களில் குடிகளைத் துன்புறுத்தும் கொடுங்கோல் மன்னனையும், தனது சுகமொன்றையே கருதும் துர்நடத்தைக்காரரையும் சும்மா விட்டு வைத்திருக்கமாட்டார்கள். வெளியிலிருந்தேற்படும் படையெடுப்போ அன்றி உள்நாட்டுக் கலகமோ அவனது வாழ்க்கையை முடித்து விடும். ஆனால், இக்காலத்தில் அப்படியல்ல, ஒரு அரசன், தான் பிரிட்டிஷ் அரசாங்கத் தோடு செய்துகொண்ட உடன்படிக்கையை மீறாதிருப்பது வரையும், நாகரிக ஆசாரங்களை வெளிப்படையாக புறக்கணியாதிருப்பது வரையும் அவனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தார் ஆதரவிருக்கின்றது. அவன் தனது சுக போகங்களுக்காகத் தன் இஷ்டம்போல் பொக்கிஷத்தை உபயோகிக்கவும், குடிகளை கொள்ளையடிக்கவும் விட்டு விடுகிறார்கள்.


(தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலைமலர், 1970)



9 May 2011

(டாக்டர் அம்பேத்கார், சென்னையிலே பல சொற்பொழிவுகளிலே தந்த அறிவுரைகளிலே சில பொறுக்குமணிகள்



                                     
(டாக்டர் அம்பேத்கார், சென்னையிலே பல சொற்பொழிவுகளிலே தந்த அறிவுரைகளிலே சில பொறுக்குமணிகள்.)

பதவிப் பிரியர்கள்

பிராமணரல்லாதார் கட்சி, தேர்தலிலே தோற்றதற்குக் காரணம், அக்கட்சியிலே பதவிபெற வேண்டுமென்ற நோக்கத்தோடு இருந்தவர்களின் போக்குதான்.

கட்சி தலைதூக்குகிறது

பிராமணரல்லாதார் கட்சி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருப்பது கண்டு களிப்படைகிறேன்.

காந்தியார் குணம்

காந்தியார் காங்கிரசின் தலைவராக இருக்கிறார். வேறு எந்தத் தேசத்தில் அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளுவார்? எதிர்காலத் தலைவராக ஏற்றுக்கொள்வர்? எதிர்கால திருஷ்டியோ தற்கால திருஷ்டியோ, இவைகளைப் பரிசீலனை செய்யும் சக்தியோ அவருக்கு இல்லை.


கொடுமை

தாழ்த்தப்பட்டவர்களாகிய நாங்கள் சென்ற 2000 வருஷ காலமாகப் பிராமண ஆட்சியில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டிருக்கிறோம்.

காங்கிரஸ் வலை

தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளைப் பறிகொடுத்துக் காங்கிரசை வலுக்கச் செய்வதுதான் காந்தியாரின் நோக்கமென்பதை அனுபவத்திலிருந்து அறிந்திருக்கிறேன். வட்ட மேஜை மகாநாட்டில் ஜின்னாவிடம்போய் அவருடைய 14 கோரிக்கைகளுக்குத் தான் இணங்குவதாகவும் அதற்கு மாறாக எனக்கு (அம்பேத்காருக்கு) ஜின்னா சலுகை காட்டகூடாதென்றும் கேட்டார். இதற்கு ஆதாரமான தஸ்தாவேஜு என்னிடம் இருக்கிறது. ஆனால் முஸ்லீம் பிதிநிதிகள் காந்தியாரின் வலையில் அகப்படவில்லை.

அன்று ஒருபோர்

புத்த மதத்திற்கும் பிராமண மதத்திற்கும் வெகுநாள் சச்சரவுகள் நடந்தன. கொள்கையில் மட்டுமல்ல; அரசியல் சமூகத் துறைகளிலும் போராடினார்கள்.

விஷமம்

நான் வேதங்களைப் படித்திருக்கிறேன், சதுர்வர்ணப் பிரயோகங்களும் மந்திரதந்திரங்களுமே அவைகளில் மலிந்து கிடக்கின்றன. இவைகளைப் போதிக்கும் மூளையில் பக்கபலமாக பகவத்கீதையையும் மனுஸ்மிருரிதயும் உபயோகிக்கிறார்கள். அவைகளில் விஷமத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

மதப்பிடி

இந்த மதசம்வாதம் சுமார் 1500 வருஷங்களுக்கு மேலாக நடந்ததாகத் தெரிகிறது. இறுதியில் ராஜதர்மத்தைக் கொலை செய்து பிற்போக்கான எதிர்புரட்சியான பிராமண மதம் வெற்றி பெற்றது. அந்தப் பிற்போக்கான மதத்தின் பிடியில்தான் நாம் இருக்கிறோம். புத்தமதம் க்ஷீணித்தது நமக்கு ஒரு பெரிய நஷ்டம். அதனால், சமூக சமத்துவமும், அறிவை உணரும் தத்துவமும் மற்றும் பலவும் ஒழிந்தன.

அறிவு வழி

இனியாவது எல்லோரும் அறிவின் வழியே நடக்க முன்வாருங்கள். அறிவுக்குப் பொருத்தமில்லாத் தன்மை. வேதாந்த விவகாரத்திலிருந்து, சமூகத் துறையிலும், பிறகு அரசியல் விஷயத்திலும் புகுந்துவிட்டது. எதிர்காலத்தில் ஜாக்கிரதையாக இருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன்.

ஆணவக் கூட்டம்

இந்நாட்டிலே பிராமணர்களே ஆளும் கூட்டமாக இருந்து வந்திருக்கிறார்கள். ஜாதி விதியாசம் பாராட்டி, மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு என்று கருதும் இயல்பினரிடம் நாட்டு ஆட்சி இருக்கலாமா? அவர்களைக் கொண்ட தேசீய சர்க்காரால் நமக்கு என்ன பயன்?

(15.10.1944 - திராவிடநாடு )அறிஞர் அண்ணா


ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி



அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை, என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் நாஸ்திகர்கள்தான்; நாஸ்திகனாக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக்கூடிய மனிதராக ஆகமுடிகிறது. அவர்கள்தான் தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்துகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய அறிஞர். அதன் காரணமாகவே அவர் ஒரு பெரிய நாஸ்திகர். அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாம் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார்.

இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்தமதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.

டாக்டர் அம்பேத்கர் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இந்து மதத்தை ஒத்துக்கொள்வதில்லை. அவர் காந்தியைப்பற்றிச் சொல்லும் போது “காந்தி ஒரு பச்சை இந்து. மனுதர்ம முறை, வர்ணாசிரம முறையைப் பாதுகாக்க நினைப்பவர். அவர் ஆதித்திராவிட மக்களுக்கு என்ன செய்ய முடியும்?’’ என்று கடுமையாகத் தாக்கி வருணாசிரம ஆதார சுலோகங்களையெல்லாம்கூட எடுத்துப்போடு, காந்தி பச்சை இந்துவாக இருப்பதால்தான் அவர் புத்தி இப்படிப் போகிறது என்று எழுதினார்.

1930_-35லேயே ஜாதி ஒழிப்பில் தீவிரக் கருத்துள்ளவராக இருந்தார்; ஜாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் (ஜாத்மத்தோடகமண்டல் என்று கருதுகிறேன்.) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஒரு அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் ஜாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக்கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமையுரையாக (address) 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு ஜாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள் என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஜாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல. ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை (Chapter) நீக்கிவிடவேண்டும் என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். அதற்கு அம்பேத்கர் “ஜாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழியவேண்டும்’’ என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப்பேசாமல் வேறு எதைப்பேசுவது? ஆகையால், அதை நீக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர் நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்: தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது.

நான் அம்பேத்கரிடம் அந்தப், பேச்சை வாங்கி “ஜாதியை ஒழிக்கும் வழி’’ என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார்.

நாம் இராமயணத்தைப்பற்றி வாயால் பேசிக்கொண்டிருக்கும் போதே, அதாவது 1932 லேயே அவர் இராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு சிவராஜ்தான் தலைவர், இதெல்லாம் குடியரசில் இருக்கிறது.
அவர் ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது, கீதையைப்பற்றி பேசும்போது, கீதை ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்றே பேசினார். அப்போது சி. பி. ராமசாமி அய்யா போன்றவர்கள் “இதென்ன அக்ரமம்; வெறும் அம்பேத்கர் பேசியிருந்தால்கூடக் கவலையில்லை; ஒரு கவுன்சில் மெம்பராக இருக்கிற அம்பேத்கர் அதுவும் சென்னையில் வந்து, கீதை பைத்தியக்காரனின் உளறல் என்று பேசுவதென்றால் அக்ரமம்’’ என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள்.

நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். அந்த மாநாட்டுக்கு, சண்முகஞ் செட்டியார் வரவேற்புரை அளித்தார். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக ஜெயக்கர் வந்திருந்தார். அவர் ஏதோ நம்மைப் பாராட்டிப் பேசிவிட்டுப் போய்விட்டார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம் ஆகப்போகிறேன் என்று சொன்னார். நானும் ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். தயவுசெய்து அவசரப்பட்டுச் சேர்ந்துவிடாதீர்கள். குறைந்தது 1லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கைவைக்கக்கூடாத மதம் ((Perfect Religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கைவைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது, உதைக்க வந்தால்கூட சிபாரிசுக்காவது ஆள்வேண்டாமா? என்று சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக்கூடா தென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கெனவே புத்தர்தான்.

நாங்கள் உலக புத்தர் மாநாட்டிற்குச் சென்றபோது அவரை பர்மாவில் சந்தித்தேன். புத்தர் மாநாட்டில் நான் பேசுவதாக ப்ரோகிராமில் (நிகழ்ச்சி நிரல்) போட்டிருந்தார்கள். ஆனால், எனக்குச் சொல்லவில்லை. நான் போனேன். பிறகு என்னமோ வேறொருவரை பேசச் சொல்லிவிட்டார்கள். அப்போது அம்பேத்கர் என்னிடம் இன்றைக்குக் கையெழுத்துப்போட்டு புத்தமதத்தில் சேர்ந்துவிடுவோம், என்று சொன்னார்.

மைசூர் மகாராஜா புத்தமதக் கொள்கையில் ரொம்பப் பற்றுள்ளவர். நானும் மைசூரிலேயே நிரந்தரமாகத் தங்கலா மென்றிருக்கிறேன். அவர் எத்தனையோ ஏக்கர் நிலம்கூட தருவதாகச் சொல்லி இருக்கிறார். இப்படி இதையெல்லாம் வைத்து ஒரு பெரிய யூனிவர்சிட்டி (பல்கலைக்கழகம்) ஆரம்பிக்காமல் நாமும் சாகிறவரையில் பேசிக்கொண்டேயிருந்துதான் என்னாவது? ஏதாவது சாவதற்குள் செய்ய வேண்டாமா? என்று இன்னும் என்னென்னமோ சொன்னார். அதோடு தைரியமாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். சேர்ந்த பிறகு ஒரு அறிக்கை வெளியிட்டார்.

“நான் இனிமேல் ராமன், கிருஷ்ணன், சிவன், இந்திரன் முதலியவைகளைக் கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. அவதாரங்கள் என்பவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. உருவ வணக்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஜாதிமுறையில், இன்னும் மோட்சம் _ - நரகம் இவற்றை நம்புவதில்லை; சடங்கு, திதி -_ திவசங்கள் ஆகியவைகளில் நம்பிக்கையில்லை.’’ இனிமேல் இவைகளைச் செய்யமாட்டேன். இதுபோல இன்று நாம் எதை எதைக் கண்டிக்கிறோமோ, ஒத்துக்கொள்வதில்லையே, அதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அம்பேத்கர் மக்களுக்கு வழி காட்டுபவர். ஜாதிமதக் குறைபாடுகளை மனதில்பட்டதைத் தைரியமாக எடுத்துக் கூறிவந்தார். சுயநலமில்லாமல் பாடுபட்டவர்; இந்தியா பூராவும் விளம்பரம் பெற்றவர். அவர் தமது மக்களுக்குப் பௌத்த மதத்திற்குப் போகும்படி வழி காட்டியிருக்கிறார். இங்கு பலபேர் மாறக்கூடிய நிலை ஏற்படும். தன் சமுதாயத்திற்குப் படிப்பு, உத்தியோகம் முதலிய காரியங்களில் முயற்சிசெய்து பல வசதிகளைச் செய்திருக்கிறார். உத்தியோகத்தில் 100க்கு 15 என்று வாங்கிக்கொடுத்தார்.

அவர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. அவர் சமதர்ம காலத்திற்குமுன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர். அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற தலைவர் ஏற்பட முடியாது.

 தந்தை பெரியார் 28.10.1956 இல் வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை - 7.12.1956)


உலகம் எவ்வளவு முன்னேறுகிறது


இன்றைய தினம் சமுதாய இழிவு ஒழிப்பு சம்பந்தமாக, சென்னையில் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கவே இந்தப் பொதுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்கள். நான் இந்தத் தியாகராயர் நகருக்குக வந்து சுமார் 10 ஆண்டு களுக்கு மேலாகிறது. இதன் காரணமாக எனது புதிய கருத்துகள் இந்தப் பகுதி மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லாமலும் போயிருக்கலாம். நான் பேச்சுத் துவக்குவதற்கு முன்பாக நண்பர் வீரமணி அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தைக் கூறினார்கள். கடவுள் இல்லை - கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் -கடவுளை பரப்பியவன் அயோக்கியன் - கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி ! இதன் தன்மைகளைப்பிறகு விளக்கு கிறேன்.

பழக்கத்தில் நம்மை ஈன ஜாதி, கோயிலுக்குள் வர வேண்டாம்; கல்லைத் தொட்டால் சாமி தீட்டாகிவிடும் என்கிறான்; சூத்திரனுக்குத் திருமணம் கிடையாது என்கிறான்; சுயராஜ்யம் என்கிறான்; அந்த சுயராஜ்யத் திலும் நாம் சூத்திர்கள், தேவடியாள் மக்கள் என்கிறான்

இந்து என்றால் என்ன? 

எதன்படி என்றால் சாஸ்திரப்படி, மதப்படி மட்டுமல்லாமல், இன்றைய அரசியல் சட்டப்படியும்கூட. இந்தச் சாஸ்திரம் என்றைக்கு எழுதினான்? இதுபோல் அயோக்கியத்தனம் உலகில் உண்டா? என்றைக்கோ, எவனோ பேர் தெரியாத அனாமதேயம், அவன் சொல்லுவான் வசிஷ்டன், நாரதன், எக்கியவல்கியன், அவன் இவன் எழுதினான் என்றெல்லாம் சொல்லு வான். இவன்களுக்கு வயது என்ன? நாரதன் 5 கோடி வருஷத்துக்கு மேல் இருந்திருக்கிறான். ஒரு கர்ப்பம் என்றால் 5 கோடி, 10 கோடி வருடம் என்பார்கள். 2,3 கர்ப்பம் முன்பு இருந்திருக்கிறான் நாரதன். அப்படி ஒருத்தன் இருந்தானா? இருக்கமுடியுமா? அதை வைத்துத் தீர்ப்பு சொல்லுகிறானே கோர்ட்டிலே; இதனுடைய அர்த்தம் என்ன? ஆளுகிறவர்கள் அயோக்கியர்கள், ஆளப்படுகிறவர்கள் இத்தனை மானங்கெட்ட பக்தர்கள். இதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?

வீரமணி இப்போது சொன்னாரே, இந்து லா என்கிறானே; யார் இந்து? இந்து என்றால் என்ன அர்த்தம்? என்றைக்கு முதற்கொண்டு இந்து வந்தான்? எவ்வளவு இலக்கியம் இருக்கிறது. ராமாயணம், பாரதம், விஷ்ணு புராணம், கந்த புராணம் என்று பார்ப்பானுக்கு எவ்வளவோ இலக்கியங்கள் இருக்கின்றன. நம்ம புலவர்களுக்கும் ஏராளமாக இருக்கிறது; பஞ்சகாவியம், அய்ந்து இலக்கணம்,அது இது என்று ஏராளமாக இருக்கிறது. எதிலாவது இந்து என்ற வார்த்தை இருக்கிறதா? எந்தப் புத்தகத்திலாவது இருக்கிறதா? இந்து என்பவன் எப்படி வந்தான் என்பது அவர்கள் சொல்லுவதிலே அசிங்கமாக இருக்குதே. சிந்துநதி காரணமாகச் சிந்துவாகி பிறகு இந்து என்ற அழைக் கப்பட்டான் என்கிறான். சிந்து நதிக்கும் நமக்கு என்ன சம்பந்தம்? ஆரியன் வந்தபோதுதானே சிந்துநதி இங்கே வந்தது?

சிந்திக்க நாதி இல்லை! 

இந்து என்றால், இரண்டு ஜாதி. அதிலே ஒன்று பார்ப்பான்; மற்றவன் சூத்திரன் . பார்ப்பான் என்றால் மேல் ஜாதி; சூத்திரன் என்றால் கீழ் ஜாதி. சூத்திரன் மனைவி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி. இது சட்டத்திலே, சாத்திரத்திலே இருக்கிறது என்று சொன்னால், பிறகு நாம் விடியறது தான் எப்போது? ஒரு மனிதனிடம், ஏண்டா உன் பொண்டாட்டி இப்படி.... என்று சொன்னால், கத்தியை எடுத்துக்கிறான். இத்தனை பேரையும் தேவடியாள் மகன் என்று சொன்னால் ஒருவனுக்கும் மானம் இல்லை என்றால், என்ன அர்த்தம்?
நமக்கு மானமிருந்தால், இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? எவனாவது பூணூல் போட்டுக் கொண்டு நம்முன் வருவானா? பூணூல் போட்டிருந்தால் என்ன அர்த்தம்? போடு செருப்பாலே, அப்படி என்று கிளம்ப மாட்டானா? உன்னை இன்னொருத்தன் பெண்டாட்டி என்ற சொன்னால், எவ்வளவு ஆத்திரம் வரும்? அதைவிட மேலாக அல்லவா சூத்திரன் என்றால் ஆத்திரம் வரும்? இதைப்பற்றிச் சிந்திக்கவே ஆள் இல்லையே; நாதி இல்லையே!

உலகம் எவ்வளவு முன்னேறுகிறது? 


பெரிய சமுதாயம், எவ்வளவு முன்னுக்கு வர வேண்டியவர்கள்? நாதியற்ற காட்டுமிராண்டியாக அல்லவா வாழுகிறோம்? வெள்ளைக்காரளைப் பாரய்யா; எவ்வளவு முன்னுக்கு வந்துவிட்டான்! மிகவும் காட்டு மிராண்டியாக இருந்தவர்கள் வெள்ளைக்காரர்கள். இன்றைய தினம் , ஆகாயத்திற்கு, சந்திரனுக்கு அல்லவா பறக்கிறார்கள்?

அமெரிக்காவைப் பார்! 

அமெரிக்காவில் ஆண் இந்திரியம் கொண்டுவந்து சீனாவிலே போய் பெண் இந்திரியம் கொண்டுவந்து இரண்டையும் சேர்த்துப் பிள்ளை உண்டாக்குகிறானே. இப்ப நேற்று, முந்தாநாள் வந்த விஷயத்திலே இரண்டு பேர் இந்திரியத்தையும் டப்பியில் வாங்கி வைத்து 10 வருடம் கழித்துப் பிள்ளையை உண்டாக்கலாம். இங்கிருந்து அமெரிக்காவுக்கு டெலிபோனில் பேசுகிறோம். நம்ம முட்டாள் பசங்களுக்கு 100, 200 கடவுள்! ஒரு காரியமும் செய்யமுடியவில்லை இவன்களாலே! இதற்கு எவ்வளவு செலவு? கல்யாணம், கருமாதி, உற்சவம் என்று எவ்வளவு செலவு? வேளைக்கு வேளை சோறு, உற்சவம்! அரசாங்கம் வரி போடுகிறது என்று சொல்லுகிறானே தவிர, இதை எவன் எதிர்க்கிறான்?

கோயிலுக்குப் போகிறான், குளிக்கிறான், முழுகு கிறான். கடவுள் சாமிகிட்ட போன உடனே டக் என்ற வெளியே நிற்கிறானே! ஏண்டா வெளியிலே நிற்கிறே என்றால், சூத்திரன் உள்ளே போகலாமா என்கிறான். எப்போ? 1973 -இல்! நமக்கு ஒரு நாடாம்; நாம் ஒரு சமுதாய மாம். இதற்கு யார் பாடுபடுகிறார்கள்? நாம் மூணே முக்கால் பேரைத் தவிர யார் இதைப் பேசுகிறார்கள்?

இந்தியக் கம்யூனிஸ்ட்கள்! 

ரஷ்யாவிலே கம்யூனிஸ்ட் இருக்கிறான் என்றால் கோயில்களை எல்லாம் இடித்தான்; பாதிரிகளை எல்லாம் வெட்டினான். இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் என்ன செய்கிறான்? பொறுக்கித் தின்கிறான்! மனிதனைப் பற்றி எவனும் பேசவில்லையே. இவ்வளவு மாநாடு நடத்தினோம்! எவனய்யா எங்களை ஆதரித்தான்? பயப்படுகிறானே, ஓட்டுப் போய்விடும் என்று!

இருப்பது கஷ்டமல்ல; சாவதே கஷ்டம்! 

ஆகவே, தோழர்களே! முதலில் நமக்கு இருக்கிற இழிவு நீங்க வேண்டும். மனிதனுக்கு இருக்கிற ஜாதி உரிமை என்ன தெரியுமா? ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 500 வருடம் இருக்கலாம். இப்போது சராசரி 52 வயதுதான். வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். அவன் வருவதற்கு முன்பு இங்கு சராசரி வயது 10கூட இல்லை; 7 வயதுதான். அவன் வந்த பிறகு வைத்தியம் சுகாதாரம் எல்லாம்.
எல்லாம் நமக்கு அவன் ஏற்றிய பிறகுதானே இவ்வளவு உயர்ந்தது. ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயது சராசரியாக வாழுகிறான். நாமும் இன்னும் 10 வருஷத்தில் 75 வயதுவரை வாழ்வோம். இப்படி நாளாக, நாளாக 500 வயதுவரை வாழ வேண்டி வரும்! இருப்பது கஷ்டமல்ல; சாவதுதான் கஷ்டம்! அவ்வளவு அற்புத அதிசயங்களை எல்லாம் கண்டுபிடித்திருக்கிறான்.

சுயமரியாதை இயக்கம் இல்லாவிட்டால்


நாம் வளர்ச்சி அடையாததற்குக் காரணம், நாம் தேவடியாள் மகனாக இருப்பதால்தான். நமக்கு, நமது சுயமரியாதை இயக்கம் வராவிட்டால் படிப்பேது? சொல்லுங்கள்! சுயமரியாதை இயக்கம் வராவிட்டால், 100-க்கு 10 கூட படித்திருக்கமாட்டார்களே! சுயமரியாதை இயக்கம் வந்ததற்குப் பிறகுதானே இவ்வளவு! சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? கடவுள் ஒழியவேண்டும்; காந்தி ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான்.

காந்தியாரை பார்ப்பான் விட்டுவைத்தானா? 

காந்தி நம்ம கொள்கைப் பக்கம் திரும்பினார். காங்கிரசுக்கும், கடவுளுக்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லை என்று சொன்னார். உடனே காந்தியைக் கொன்று போட்டான், சொன்ன 30 நாளிலே! இவரும் ராமசாமி ஆகிவிட்டார்; இவன் இந்தியாவிலே பெரியஆள்; இவனை விட்டுவைக்கக் கூடாது என்று உடனே கொன்று போட்டான்.

செருப்பால் அடித்தோமே கடவுளை! 

கடவுள் கதையும் சிரிப்பாய்ச் சிரிக்குது. அதுதான் வீரமணி சொன்னாரே; செருப்பால் அடித்தார்களே கடவுளை! என்ன ஆகியது? செருப்பாலே அடித்தால் ஓட்டுப் போடமாட்டான் என்று காமராஜர் முதற்கொண்டு பிரசாரம் செய்தார். தி.மு.க. 183 வந்துவிட்டதே! காங்கிரசு, காமராசர், கடவுள், வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20பேர்கூட வரவில்லையே. சாமியைத் திட்டுகிறோம் என்று குறை சொல்லுகிறார்களே தவிர, சாமியை செருப்பாலடித்தவர்கள் 200 பேர் வந்து விட்டார்களே!

நாம் பள்ளத்தில் கிடக்கிறோம்! 

ஆனதனால் மக்கள் அறிவு பெற்று வருகிறார்கள்; நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். விஷயங்களை எடுத்துச் சொல்லவேண்டும். தெரியாது அனேகம் பேருக்கு. இப்போது நாம் முன்னேற்றம் அடைய வேண்டும். மேலே வரவேண்டும். அப்புறம் இன்னும் மேலே போகலாம். இப்போது நாம் பள்ளத்தில் கிடக்கிறோம். 4ஆவது ஜாதி, 5ஆவது ஜாதி, தீண்டப்படாத ஜாதி, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்றல்லவா நாம் இருக்கிறோம்? இது அல்லவா மாற வேண்டும்? இது மாறாமல் மேலே போக முடியுமா? இதை மாற்றிவிட்டு அல்லவா மேலே போகவேண்டும்? நாங்கள் தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டு வருகிறோம்; எங்களால்தான் முடிய வேண்டும என்று இருக்கிறது நிலைமை! வேறு எந்தக் கட்சிக்காரருக்கும் கவலை இல்லை! எலக்ஷனிலே ஓட்டுப் போய்விடும் என்று பயப்படுகிறார்கள். ஆகவே நாம் மாநாடு போட்டோம்,. அதற்குக் காரணம் கூட வீரமணி சொன்னாரே!

சட்டத்தில் தந்திரம்! 

தீண்டாமை இல்லை என்று சட்டம் செய்துபோட்டான். எல்லாவற்றிலும் தீண்டாமை ஒழிந்துவிட்டது என்ற சொல்லிவிட்டு மதத்திற்கு மட்டும் தீண்டாமை என்று நிபந்தனை போட்டுவிட்டான். நாம் கர்ப்பகிரகத்திற்குள் போகக்கூடாது என்று சட்டம் செய்தான். எனவேதான். மாற்றவேண்டும் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டோம். சட்டத்திலும், சாஸ்திரத்திலும் இருப்பதாலே முதலில் அதை மாற்ற வேண்டும் என்ற முடிவு செய்துவிட்டோம்.

ஆட்சியை ஒழித்தாக வேண்டும்! 

சட்டத்திலே இருப்பது ஒழியவேண்டுமானால், சட்டத்தை ஒழித்தால்தான் உண்டு; சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றால் ஆட்சியை ஒழித்தால்தான் உண்டு! அந்த அளவுக்கு நாம் பக்குவமாக வேண்டும். ஆனால், அவன் ஆட்சி ஒழியும்படி இல்லாமல் பாதுகாத்துக் கொண்டான். நாடு கூட்டாக இருந்தால் எல்லாம் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று நாட்டை 14,15 நாடாகப் பிரித்தான். அந்தந்த நாடு மற்ற நாட்டோடு சம்பந்தம் இல்லை என்றான். 16 மாநிலத்திலே மக்கள் இருக்கிறார்கள்.அவனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையே! மலையாளம் , தெலுங்கு, இந்தி வங்காளி என்று தனித்தனி மாநிலங்கள்

அரிய முயற்சி தேவை! 

தமிழ்நாட்டில் உள்ள நாலரைக் கோடி மக்களில் துலுக்கன், கிறிஸ்தவனைத் தவிர, மூன்று கோடி மக்கள் சூத்திரன்தானே? முஸ்லிம், கிறிஸ்துவன் எல்லாம் சேர்த்தால் 10 லட்சம் இருக்கும். ஆகவே, இதை மாற்றியாக வேண்டும்; பெரிய விஷயந்தான். பெரிய முயற்சி செய்ய வேண்டும்! பெரிய முயற்சி செய்ய வேண்டும்!!

மனிதன் இருக்க வேண்டும்! 

ஒரு அரசாங்கம் நடக்க வேண்டுமானால் அரசியல் சட்டம் வேண்டும்; ஒத்துக்கொள்கிறேன். அதற்காக அரசாங்கம் நடக்க வேண்டும் என்பதற்காகப் பார்ப்பான் இருக்க வேண்டுமா? அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதற்காகச் சூத்திரன் இருக்க வேண்டுமா? மனிதன் தானே இருக்க வேண்டும்? மற்ற நாட்டிலேயும்தான் அரசாங்கம் நடக்கிறது. அங்கு பார்ப்பான், சூத்திரன் இருக்கிறானா? ஆகவேதான், அவன் வைத்திருக்கிற பாதுகாப்பு எல்லாம் எல்லோரும் ஒன்று சேரக்கூடாது என்பது, பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதாற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு. நாம்தான் மாற்ற வேண்டும் என்கிறோம்.

மாறு அல்லது மாண்டு போ!

நாம் நடத்திய மாநாட்டுக்கு வேறு கட்சிக்காரர்கள் ஒருவரும் வரவில்லையே; ஓர் உதவியும் செய்ய வில்லையே; சி. அய். டி. யும் வேறு கட்சிக்காரன் வருகிறானா என்று கவனித்து வந்தான். எனவே பயந்து கொண்டு ஒருவரும் வரவில்லை. இழிவுக்கு ஆளான வன் எல்லாம் வரவேண்டுமே! வந்து உதவி செய்ய வேண்டுமே! மந்திரிகள் வரவேண்டுமே! ஆகவே விஷயம் முக்கியமானது, மாறியே ஆகவேண்டும்; மாறாவிட்டால் சாகவேண்டும்!

(தந்தை பெரியாரின் இறுதிப்பேருரையாம் மரண சாசனத்திலிருந்து)
நன்றி:விடுதலை (19-12-2010)